விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘மெர்சல்’. விஜய் மூன்று வேடங்களில் நடித்த இந்தப் படத்தில், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் நடித்தனர். ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

இந்தப் படத்தில் மத்திய அரசின் திட்டங்களான டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி. ஆகியவற்றைப் பற்றி வசனங்கள் இடம்பெற்றிருந்ததால், அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பே படத்துக்கு விளம்பரமாகவும் அமைந்துவிட, நல்ல வசூல் கிடைத்தது.

அதுமட்டுமின்றி, உலக அளவிலும் ‘மெர்சல்’ படத்துக்கு கவனம் கிடைத்துள்ளது. சில விருதுப் போட்டிகளிலும் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சீனாவில் ‘மெர்சல்’ படம் திரையிடப்பட இருக்கிறது. இப்படத்தை சீன மொழியில் வெளியிடுவதற்கான உரிமையை எச்.ஜி.சி. நிறுவனம் பெற்றுள்ளது.

‘தங்கல்’, ‘பாகுபலி’ போன்ற இந்தியப் படங்களுக்கு வெளிநாடுகளில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியப் படங்களின் கதைகளை வெளிநாட்டவர்கள் விரும்ப ஆரம்பித்திருப்பதால், இந்தியப் படங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகரித்துள்ளது.

சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் ‘மெர்சல்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.