காவிரி பிரச்சனை குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு தலைவர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் ரஜினிக்கும் போன் செய்து அழைப்பு விடுத்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை தமிழகத்திற்கு சாதகமாக இல்லை என்று எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதற்கு எதிராக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அதே சமயத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். மே 19ம் தேதி இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அந்த கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கமல் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கூட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு தலைமை தாங்க உள்ளார்.

அதன் ஒரு பகுதியாக கமல்ஹாசன் தற்போது பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல் மற்ற தலைவர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார்.தமிழிசை, விஷால், திருநாவுக்கரசர், விஜயகாந்த், நாசர், தினகரன் ரஜினி, ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் மீதம் இருக்கும் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க இருக்கிறார்.

Leave a Reply